Friday, 13 December 2019

பாடம் 34:

பாப கிரகங்கள் நன்மை செய்யும் அமைப்புகள்:

                பொதுவாக ஜாதகத்தில் லக்ன பகை மற்றும் பாவ கிரகங்கள் அவற்றின் தசைகளில் ஜாதகருக்கு தீய பலன்களைச்செய்யும். ஆனால் சில அமைப்புகளில் நல்ல பலன்களை செய்வதை காணலாம். இதை புரிந்து கொண்டால் துல்லியமாக பலன்களை கணிக்கலாம். அது பற்றி விளக்குகிறேன். 

-----லக்ன பகை, பாப கிரகங்கள் லக்னத்திற்கு 3,6,10,11ஆகிய உபஜெய பாவங்களில் நின்று அந்த பாவங்கள் அவற்றின் நட்பு வீடுகளாக இருந்து, இயற்கை சுபர்களான குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் ஆகிய கிரகங்களில் குறைந்தது ஏதாவது ஒன்றின் பார்வை அல்லது இணைவு பெற்றிருந்தால் அவற்றின் தசையில் தன் காரக மற்றும் தனது பாவத்தின் காரகத்துவங்கள் முழுமையாகவும், சிறப்பாகவும் கிடைக்கச்செய்யும். பார்க்கும் சுபர் வலிமையுடன் இருந்தால் சிறப்பு.
       உதாரணமாக கும்ப லக்னத்தை எடுத்துக்கொள்வோம். லக்னத்திற்கு 6ம் பாவ அதிபதி சந்திரன் லக்னத்திற்கு பகைவர். எனவே அவரின் தசை கடன், நோய், வேலை இழத்தல், தொழிலில் நஷ்டம் போன்ற கெடு பலன்களை செய்யும். இந்த சந்திரன் லக்னத்திற்கு 3ம் வீடான மேஷத்தில் நட்புடன் இருக்கும்போது குரு தனது வீடான தனுசுவிலிருந்து 5ம் பார்வையால் பார்த்துவிட்டால் சந்திர தசை ஜாதகருக்கு தாயாரின் சொத்து அல்லது தாய்வழி உறவினர் மூலம் நல்ல உதவிகள் பெற்று அல்லது வங்கி கடன் மூலம் தொழில்செய்து சிறப்படைவார். நோய்களிலிருந்து விடுபடுவார். இவ்வாறு சந்திரனின் காரகத்துவம் மற்றும் 6ம்வீட்டின் காரகத்துவங்கள் மூலம் சிறப்படைவார்.
இதுபோல் 6,10,11 பாவங்களையும் கணிக்கலாம்.

-----கிரகங்கள் தனது பாவங்களுக்கு 6,8,12ல் மறைந்தால்அவர்களின் தசை நல்ல மற்றும் கெடுபலன்களை செய்யாது.  இயற்கை சுபர் களின் பார்வை, இணைவு ஏற்பட்டால் அவற்றின் காரகத்தின் வழியில் தனது பாவத்தின் காரக பலன்களை முழுமையாக செய்யும்.
      உதாரணமாக மேலே குறிப்பிட்ட உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம். சந்திரன் 11ம் வீட்டில் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். 11ம் வீடு சந்திரனின் 6ம் வீட்டிற்கு 6ம் வீடு. எனவே சந்திர தசையில் 6ம் வீட்டின் கெடுபலன்களை நடக்காது. இயற்கை சுபர் பார்த்தால் மேற்குறித்த நல்ல பலன்கள் நடக்கும்.

-----இயற்கை பாவர்களான சனி, செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றால் அவர்களின் தசையில் அவர்களின் கொடிய காரகத்துவங்கள் நடைபெறும். ஆனால் ஜாதகத்தில் எந்த பாவங்களுக்கு அவர்கள் அதிபதியோ அந்த இடங்கள் மேம்படும்.
       உதாரணமாக துலாம் லக்னத்திற்கு லக்னத்தில் உச்சம் பெற்ற சனியின் தசையில் ஜாதகர் அதிஷ்டங்களை அடையமாட்டார். ஆனால் சனி 4,5 இடங்களுக்கு அதிபதி என்பதால் சனி தசையில் ஜாதகரின் மக்கள் நன்றாக இருப்பார்கள். புத்திரர்கள்,கல்வி,தாயார் வழியில் ஜாதகருக்கு நல்ல பலன்கள் இருக்கும். அதாவது 4,5ம் இடங்கள் மேன்மை அடையும்.

-----ஒரு ஜாதகத்தில் பாவக் கிரகங்கள் பலம் பெறுவது எவ்வாறு நன்மை செய்யும் என்றால், நமது ஜோதிட விதிகளின்படி ஒரு தசை நன்மையான பலன்களைத்தர வேண்டும் எனில் அந்த தசாநாதனுக்கு வீடு கொடுத்த கிரகம்  வலிமை அடைய வேண்டும் என்பது முக்கியமானது.
      அதன்படி இயற்கை பாவர்களான சனி, செவ்வாயின் ராசிகளான  மகரம், கும்பம், மேஷம், விருச்சிகத்தில் அமர்ந்து தசை நடத்தும் ஒரு கிரகம் நற்பலனைத்தரவேண்டும் என்றால் என்றால் அந்த கிரகத்துக்கு வீடு கொடுத்த சனியும், செவ்வாயும் வலுப்பெற வேண்டும்.
       உதாரணமாக ராகு சனியின் வீடான மகரத்தில் 3 அல்லது 11ம் இடமாக அமர்ந்து அதன் தசை பெரிய பண வரவை அளிக்கவேண்டும் என்றால் சனி துலாத்தில் உச்சவலு பெறவேண்டும். 

No comments:

Post a Comment

பாடம் 37: ஜாதகம் பார்க்க பயிற்சி முறை: ந                    எனது 36 பாடங்களையும் நன்றாகப்  படித்தீர்களேயானால் சோதிடம் பற்றிய தெளிந்த அ...