பாடம் 33:
ராகு, கேது காரகத்துவங்கள்:
ஒரு கிரகத்தின் செயல்பாடுகள் எனப்படும் காரகத்துவங்களை வைத்துஅடையாளப் படுத்தப்படுகையில் வேத ஜோதிடத்தில் ராகு போகக்காரகன் என்றும் கேது ஞானக்காரகன் என்றும் குறிப்பிடப்படுகிறார்கள்.
அதுபோலவே ராகு என்பவர் ஒருநிலையில் போகக்காரகனாகவும், இன்னொருநிலையில் சாதுரியமாகஏமாற்றும் கிரகமாகவும் செயல்படுவார். அதாவது, தான் ஏமாறுகிறோம் என்பதே தெரியாமல் தன்னிடம் சந்தோஷமாக ஏமாந்து செல்பவர்களை உண்டாக்கும் திறமையை ராகு அளிப்பார்.
என்னவெனில் ராகுவுடன் மிக நெருக்கமாக இணையும் கிரகம் முழுமையாக ராகுவிடம் சரணடைந்து வலிமை இழக்கும் என்பதுதான். இதுபோன்ற வலுக்கட்டாயமாகப் பறிக்கும் வேலைகளையும், மற்றக் கிரகத்தை ஆக்கிரமிக்கும் வேலைகளையும் கேது செய்வது இல்லை. கேதுவுடன் மிக நெருக்கமாக இணையும் ஒரு கிரகம் ஒருபோதும் தனது சக்திகளை முழுக்க இழப்பது இல்லை. தன்னுடைய செயல்பாடுகளை ஜாதகருக்குத் தரும் வலிமை அந்தக் கிரகத்திற்கு இருக்கவே செய்யும்.
ராகு, கேதுக்கள் முதலில்...
தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனையும், அடுத்து தான் இருக்கும் வீட்டின் அதிபதியின் பலனையும், பின்னர் தன்னைப் பார்த்த கிரகம், அதன்பிறகு தான் அமர்ந்த சாரநாதனின் பலன் இறுதியாக தனக்கு கேந்திரங்களில் இருக்கும் கிரங்களின் தன்மை அல்லது தனது சாரத்தில் அமர்ந்த கிரகங்களின் தன்மைகளையே செய்கின்றன. இந்த வரிசைப்படியே அவைகளின் தசையில் பலன்கள் நடக்கும்.
ராகு என்பது ஆழமான, ஒளிபுக முடியாத, எதையும் பார்க்க முடியாத ஒரு இருட்டு என்பதால் அதனுடன் இணையும் ஒரு கிரகத்தின் ஒளி வெளியே தெரிய முடியாது. ராகுவிடமிருந்து அந்தக் கிரகத்தின் ஒளி தப்பித்து அந்த மனிதனுக்கு நன்மைகளையோ, தீமைகளையோ செய்ய முடியாது.
ஒளி உட்புக முடியாத, ஒரு ஆழமான இருட்டின் கடினமான, கருப்பான மையப்பகுதி ராகு என்றால், அதன் மையத்தில் இருந்து விலக விலக, இருள் குறைந்து கொண்டே வந்து ஒளியும், இருளும் சங்கமிக்கும் லேசான ஆரஞ்சு நிறமான ஓரப் பகுதி கேது ஆவார். இதன் காரணமாகவே நமது மூலநூல்கள் ராகுவை கரும்பாம்பு என்றும், கேதுவை செம்பாம்பு என்றும் குறிப்பிடுகின்றன.
ஆனால் கேது என்பது ஆழமற்ற, நாம் ஊடுருவிப் பார்க்கக்கூடிய, மேலோட்டமான இருட்டு என்பதால் கேதுவுடன் இணையும் ஒரு கிரகத்தின் சுய ஒளி ஓரளவு உயிர்ப்புடன், தாக்குப் பிடிக்கும் திறனுடன் இருக்கும். முழுக்க முழுக்க அந்தக் கிரகத்தின் ஒளி கேதுவுக்குள் அமிழ்ந்து விடுவதில்லை, மறைந்து விடுவதில்லை. எனவே கேதுவுடன் இணையும் ஒரு கிரகத்திற்கு நன்மை, தீமைகளைச் செய்யும் தகுதி இருக்கும்.
ஜோதிடத்தில் ராகு-கேதுக்கள் இரண்டு கிரகமாக குறிப்பிடப்பட்டாலும் இவை இரண்டிற்குமிடையே கண்ணுக்கு தெரியாத ஒரு இணைப்பு இருப்பதால்தான் இவைகள் ஒரு பாம்பினைப் போல நீளமான ஒரு கோடாக உருவகப்படுத்தப்பட்டு ராகு பாம்பின் தலையாகவும், கேது பாம்பின் வாலாகவும் நமக்கு உணர்த்தப்பட்டது.
பூமி சூரியனைச் சுற்றும் நேரான சுற்றுப்பாதையின் குறுக்காக சற்றுச் சாய்வாக சந்திரனின் பாதை அமைகிறது. இதில் மேலே அமைந்த நிழல் ராகுவாகவும், கீழே உள்ளது கேதுவாகவும் அமைந்தது.
பூமி சூரியனைச் சுற்றி வரும் சுற்றுப்பாதையும், சந்திரன் பூமியைச் சுற்றி வரும் விரிவுபடுத்தப்பட்ட சந்திரப்பாதையும், பூமியின் நிழலும், சந்திரனின் நிழலும், வெட்டிக் கொள்ளும் புள்ளிகளே ராகு-கேதுக்கள் எனப்படுகின்றன.
பொருள் தரும் விஷயத்தில் ராகுவிற்கும், கேதுவிற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் எப்படி இந்த பணம் வந்தது என்று மறைமுகமான வழிகளில், வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு ராகு பணம்தருவார் என்றால் வெளிப்படையாகச் சொல்லக் கூடிய கவுரவமான வழிகளில் கேது பணத்தைத் தருவார். அதுபோலவே தோஷ அமைப்புக்களிலும் ராகுவைப் போல கடுமையான கெடுபலன்களை கேது செய்வது இல்லை.
லக்னத்தோடும், அஷ்டமாதிபதியோடும் ஒரே நேரத்தில் ராகு சம்பந்தப்படும் நிலையில் ஜாதகரை சுயமரணம் எனும் முடிவைத் தேட வைக்கிறார். இப்படி ஒருவர் தற்கொலை முடிவெடுக்கும் நிலையில் அஷ்டமாதிபதியை ராகு மிகவும் நெருங்கி முற்றிலும் பலவீனப்படுத்தி இருப்பார்.
மேற்கண்ட அமைப்பில் எட்டுக்குடையவன் பாபக்கிரகமாக இருந்தாலோ, இவர்களுடன் ஆறுக்குடையவரும் சம்பந்தப்பட்டிருந்தாலோ தற்கொலை என்பது கொடூரமான விபத்தாக மாறலாம்.
இன்னும் ஒரு முக்கிய நிலையாக குழந்தைப்பருவத்தில் வரும் ராகு தசை, சிறுவயது சுக்கிர தசையைப் போலவே நன்மைகளைத்
தராது. அதிலும் பள்ளிப்பருவத்தில் ஒரு குழந்தைக்கு வரும் ராகுவின் தசை, அக்குழந்தையின் கல்வி பயிலும் ஆர்வத்தைக் குறைக்கும்.
இதுபோன்ற அமைப்பில் அந்த மாணவனோ, மாணவியோ படிப்பைத் தவிர்த்து விளையாட்டு, பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஈடுபாடு
கொள்வார்கள். சில நிலைகளில் இளம்பருவத்தில் வரும் ராகுவின் தசை
கல்வியில் தடைகளை ஏற்படுத்தும்.
சிறுவயதில் நமக்கு பள்ளிப் படிப்பைத் தவிர வேறு எந்த வேலைகளும் இக் காலத்தில் இல்லை என்பதால்தான், அதற்கான முரண்பாடான போகக்காரக ராகுவின் தசை நடக்கும் போது கல்வியில் தடை, படிப்பு சரிவர வராதது போன்ற பலன்கள்
நடக்கின்றன.
இன்னொரு முக்கிய நிலையாக இளம் பருவத்தில் காமத்தை அறிமுகப்
படுத்துவதும், ஒரு பெண்ணை காதல் என்ற பெயரில்கற்பிழக்கச் செய்வதும் இந்த ராகு, கேதுக்கள் தான்.
அதிலும் பள்ளியிறுதி, கல்லூரி போன்ற வயதில் இருக்கும் இளம் பெண்களுக்கு சுக்கிரனின் வீடுகளில் அமர்ந்த ராகு, கேதுக்களின் தசையோ, புக்தியோ அல்லது சுக்கிரன் மற்றும் ஆறு, எட்டாம் அதிபதிகளோடு சம்பந்தப்பட்ட நிழல் கிரகங்களின் தசா, புக்திகள் நடைபெறுமாயின் பெற்றோர்கள் மிகக்கவனமாக இருக்க வேண்டும்.
அருள் அணி, பொருள் அணி என இரண்டு பிரிவாகப்பிரிக்கப்படும் குரு, சுக்ர தலைமையிலான இரண்டு பிரிவுகளுக்கிடையே, குருவின் நண்பர்களான சூரிய, சந்திர, செவ்வாயின் லக்னங்களுக்கும், குருவின்
லக்னங்களுக்கும் சாதகமாகச் செயல்படும் குணத்தைக் கொண்டவர் கேது.
ராகுவும், கேதுவும் ஒரு நேர்கோட்டின் இரண்டு எதிரெதிர் முனைகள்
என்பதை வேத ஜோதிடம் ஏற்கெனவே நமக்குதெளிவுபடுத்தி இருக்கிறது.
லக்னத்துடனோ, ராசி எனப்படும் சந்திரனுடனோ சுபத்துவமும், சூட்சும வலுவும் பெற்று கேது சம்பந்தப்படுவாரே எனில், ஒருவரால் பிரம்மத்தை
உணரும் ஞானியாக முடியும். போலித்தனமற்ற, பற்றற்ற, உண்மையான, உலகை உய்விக்க வந்த ஞானப் பெரியார்கள் கேதுவால் உருவாக்கப்பட்டவர்கள்.
குறிப்பாக கோவில்களில் ஆழ்வார்கள், நாயன்மார்கள்வரிசையில் அவர்களுக்குக் கீழே எழுதப்பட்டிருக்கும் அவர்களது பிறந்த மாதம் மற்றும் நட்சத்திரக் குறிப்புகளைப் பார்த்தீர்களேயானால்
அவைகள் பெரும்பாலும் அஸ்வினி, மகம், மூலம், சதயம், சுவாதி என ராகு-கேதுக்களின் நட்சத்திரமாகவே குறிப்பிடப்பட்டிருக்கும்.
எல்லோருக்கும் அம்மையப்பனாக விளங்கும் சர்வேஸ்வரன் அவதரித்ததே ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில்தான் என்பது
ஒன்றே போதும் ராகுவின் மகத்துவத்தை விளக்குவதற்கு.
இன்னுமொரு சிறப்பாக பனிரெண்டு வீடுகளுக்குள் அடங்கும் இருபத்தியேழு நட்சத்திரங்களில், சில கிரகங்களின் நட்சத்திரங்கள்
உடைபட்டு இரண்டு ராசிகளில் விரவிக் கிடக்கும் நிலையில் ராகு-கேதுக்களின் ஆறு நட்சத்திரங்களும் துண்டாகாமல் ஒரு ராசிக்குள் முழுமையாக அமைவதும் இந்த சாயாக் கிரகங்களின் சிறப்புத்தான்